ஞாயிறு, 19 நவம்பர், 2023

தயிர் சாதம் -சிறுகதை

 


தயிர் சாதம்

என் பேரு அமீர் ,பேர்ல மட்டும் தான் வசதி குடி கொண்டு இருக்கு  ஆனா நிஜத்துல வறுமை மட்டும் தான் என் நிழலா இருக்கு .சில கஷ்டங்கள் லட்சியத்துக்காக நானே தேடிக்கிட்டது தான் .

டே அமீர் நம்ம சமூகத்துல பத்தாவது முடிச்ச உடனே பாஸ்போர்ட் எடுத்திட்டு எல்லோரும் கப்பலுக்கு போயிடுவாங்க ஆனா நீ மட்டும் தான் டிகிரி முடிச்ச .

உன் படிப்புக்கு ஏத்த மாதிரி உன் வாப்பா ஏதாவது வேலை வாங்கி தருவாரு .

உனக்கு இந்த கூத்தாடி தொழிலெல்லாம் வேணாம்ப்பா ,நல்லா படிச்சோம்மா ,நல்ல வேலைக்கு போனோம்மா ,வீடு வாசல் கட்டினோம்மா,படைச்ச ரப்பை அனு தினமும் தொழுதோம்மான்னு இருக்கணும் .

நமக்கெல்லாம்  இந்த கூத்தாடி பொழப்பு வேணாம் அமீர்

அம்மா நான் ஒண்ணும் சினிமாவுல நடிக்க போகலை ,டைரக்சன் மட்டும் தான் பண்ண போறேன் .என் திறமைக்கு நிச்சயமா சினிமாவுல வாய்ப்பு கிடைக்கும் .

சினிமா நீ நினைக்குற மாதிரியெல்லாம் இல்லை அமீர் ,அது ஒரு கனவு தொழிற்சாலை பல பேருக்கு சினிமா வெறும் கனவா மட்டும் தான் போய் இருக்கு சினிமா ஒரு எரிகல் மாதிரி அதுல நிறைய கனவை சுமக்குற மனிதப்பூச்சிகள் சிக்கி ,சிதறி ,சின்னாபிண்ணமாகி சாம்பலா தான் போய் இருக்கு

எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவ்வா அப்ரோச் பண்ணனும்னு நீங்க  தான் எனக்கு கத்து கொடுத்தீங்க  ,இப்ப நீங்களே நெகடிவ்வா சொல்லலாமா ?

என் புள்ள வாழ்க்கைல தோத்துட கூடாதுன்னு பயத்துல சொல்றேன்ப்பா.நீ நல்ல வேலைக்கு போகணும் ,கை நிறைய சம்பாதிக்கணும் ,கால காலத்துல கல்யாணம் பண்ணனும் ,குழந்தை ,குட்டிங்க பெத்துக்கிடணும்ன்னு பெத்தவங்க எங்களுக்கும் ஆசை இருக்காதே

சினிமாவுல போனா இதெல்லாம் நடக்குறது கேள்விக்குறி தான் அமீர்

நான் ஜெயிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குமா

எல்லாருமே நம்பிக்கையோட போய் தான் தோத்து போய் இருக்காங்கப்பா

அம்மா எனக்காக எனக்கு பிடிச்ச சினிமாவுல போக விடும்மா ,நம்ம சொந்தக்காரங்க ஆயிரம் குறை சொன்னாலும் நீயும் ,வாப்பாவும் எனக்கு சப்போர்ட்டா இருந்தா போதும் .

எனக்கு நீங்க காசு ,பணம் எதுவும் தர்ற வேணாம் .என் முயற்சிக்கு உறுதுணையா இருந்தா போதும் .நான் சென்னைக்கு போறேன்ம்மா ,சினிமாவிலும் ,வாழ்க்கையிலும் ஜெயிச்சிட்டு தான் இந்த ஊருக்கு வருவேன் .

இங்க பாரு அமீர் ,உன் விருப்பத்துக்காக தான் இப்ப விடுறேன் ,உன்னால முடியலைன்னா திரும்ப ஊருக்கே வந்திடு .அப்புறம் நாங்க சொல்றதை கேட்டிட்டு அதுப்படி வாழுனோம்னு அம்மா சல்மா அறிவுரை வழங்கி அனுப்பினாள் .

ஊரை விட்டு வந்து இன்றோட ரெண்டு வருஷம் ஓடிப்போனது மிச்சம் ஆனா இந்த சினிமாவுல நான் நினைச்ச மாதிரி எதுவும் பண்ண முடியலை .ரெண்டு மூணு உப்புமா கம்பெனி திரைப்படத்தில் உதவி இயக்குனராக (இயக்குனர் சொல்லும் எல்லா எடுபிடி வேலைகள் செய்யும் நபராக )பணிபுரிந்தேன் ..எப்படி இருக்க வேண்டியவன் இப்படி எல்லாம்  கஷ்டப்படணுமான்னு தோணும் .வாழ்க்கையில ஜெயிக்கணும்னா கஷ்டப்பட கத்துக்கணும்னு சொல்வாங்க  அதான் பிடிச்ச துறையில ஜெயிக்கிறதுக்காக கஷ்டப்பட கத்துக்கிட்டேன் .

எவனொருவன் தன்னை தானே தாழ்த்தி கொள்கிறானோ அவன் நிச்சயம் மேல வருவான்னு பைபிள்ல சொல்றாங்க .என் வாழ்க்கைல எவ்வளவு அவமானங்கள் ,கஷ்டங்கள் வந்தாலும் அதை எனக்குள்ளயே புதைச்சுக்கிட்டேன் .இதுவரைக்கும் அம்மா ,வாப்பாகிட்ட காசு வேணும்ன்னு கேட்டதில்லை ஏன்னா ஒரு வயசுக்கு அப்புறம் பெத்தவங்களுக்கு பசங்க தான் செய்யணும் .என் அம்மாவுக்கு ரம்ஜானுக்கு ஒரு புடவையாவது எடுத்து தரணும்ன்னு ஆசை இருக்கு   ஆனா வாங்குற சம்பளம்  ரூம் வாடகை , சாப்பாடுக்கே சரியா இருக்கு .

ஷூட்டிங் நடந்தா சாப்பாடு இலவசமா கிடைச்சுடும் ஆனா முன்னே மாதிரி கொரோனாவுக்கு அப்புறம் ஷூட்டிங் எல்லாம் நடப்பதில்லை .வேலையும் முன்ன மாதிரி ரெகுலரா கிடைப்பதில்லை .கிடைக்கும் சொற்ப பணத்திலும் வாடகை ,மிச்ச மீதம் மீறும் பணத்தில் குறைவான விலையில் விற்கும் அரிசியை வாங்கி பொங்கிக்குவேன் .குழம்பு வைத்தால் செலவு அதிகமாகும் என்பதால் பெரும்பாலும் அந்த தெருமுனையில் உள்ள பாட்டியிடம் அஞ்சு ரூபாய்க்கு தயிர் வாங்கி சோற்றில் போட்டு சாப்பிடுவேன் .ஒரு நாளைக்கு தயிர் சாதம் பரவாயில்லை தினம் ,தினம் சாப்பிட்டால் வெறுத்து போகும் .அந்த வெறுப்பெல்லாம் என் வாழ்க்கையிலும் வந்தாலும் அதையெல்லாம் என்னால் செய்ய முடியாது .ஏனென்றால் பசி கொடுமையில் ஒரு கட்டத்தை தாண்டி சாப்பிட்டு விடுவேன் .

இந்த சென்னை எவ்வளவு மோசமா இருந்தாலும் கஷ்டப்படுற என்னை பார்த்து இரக்கப்படுவதற்கு நிறையபேர் இருந்தாங்க .தயிர் விக்கிற பாட்டி விக்கிற விலைவாசியில் அஞ்சு ரூபாய்க்கு அவ்வளவு தயிர் கொடுப்பது எல்லாம் பெரிய விஷயம் தான் .காசு இல்லாத சில நேரங்களில் ரெண்டு ரூபாய் அல்லது கொசுறு தயிர் எல்லாம் கொடுத்து அந்த பாட்டி உதவி இருக்கிறது ..பஸ் ரூட் இல்லாத சில கம்பெனியில் சான்ஸ் தேடுவதற்க்காக ஆட்டோவில் தான்  செல்ல வேண்டியிருக்கும் .மற்றவர்களுக்கு வாங்கும் ஆட்டோ சார்ஜை விட உதவி இயக்குனர்களுக்கு குறைவாகவே வாங்கினார் ஆட்டோ டிரைவரான ஜார்ஜ் அண்ணன் .

சென்னையில் பணக்காரனும் அனைத்து வசதியோடு பாரினில் வசிப்பது போலவும் வாழலாம் .என்னை போல தினம் ,தினம் வாழ்க்கையை தேடி ஓடும் அன்றாட காய்ச்சியும் வாழலாம் என்பதை இந்த ரெண்டு வருஷம்  பட்டதுக்கு அப்புறம் கிடைத்த அனுபவ படிப்பு கற்று கொடுத்தது .

விஜய் ,அஜித்தை வைத்து படம் இயக்கிய வெற்றி இயக்குனர் அவரே நடித்து இயக்கிய ஒரு சில படங்கள் சரியாய் போகாததால் இயக்கும் வாய்ப்பு இன்றி தவித்தார் .அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செபாஸ்டின்  அண்ணாவிடம் ஏதாவது சான்ஸ் இருக்குமா என்று கேட்டேன் .டிகிரி முடித்து ஒரு மொட்டை மாடியில் அஞ்சு வருஷத்துக்கு மேலாக கஷ்டப்படும் அவர் நிலையை கண்டு என் நிலை எவ்வளவோ மேல் என்று தோன்றியது .

இங்கு வாய்ப்புக்காக அலைந்து கொண்டே இருக்க வேண்டும் .விடாமுயற்சியும் ,நம்பிக்கையும் ,திறமை இருந்தால் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் இன்னமும் இருந்தது .

அடுத்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு நாள் பயிற்சி பட்டறை வகுப்பு அறிவிப்பு அறிவித்து இருந்தார்கள் .அந்த ஒரு நாள் பயிற்சி வகுப்பில் சேர ஒரு காரணம் மட்டுமே என்னிடம் இருந்தது.

எப்படியாவது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்கம் சார்ந்த கலையை இன்னும் மேம்படுத்தி என்னுடைய கதையை திறம் பட எடுக்க ஆசைப்பட்டேன் .கதை ,திரைக்கதை ,வசனம் சிறப்பாக எழுத தெரிந்தும் இயக்கம் சார்ந்த நுண்ணறிவு அவ்வளவாக இன்னும் எனக்கு வரவில்லை என்று தோன்றியது .இதுவரை நான் வேலை செய்த உப்புமா கம்பெனி இயக்குனர்களும் எடுபிடி வேலை வாங்கினார்களே தவிர பெரிதாக ஒன்றும் சொல்லித் தரவில்லை .

நாலாயிரம் ரூபாய் என்பது என்னை பொறுத்தவரை பெரிய பணம் தான் இருந்தாலும் இயக்குனர் லோகேஷை சந்தித்து விட வேண்டும் என்ற ஆசை எனக்குள் வேரூன்றி இருந்தது .சினிமா உதவி இயக்குனர் பணிகளுக்கிடையில் இரவில் ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து எப்படியோ நாலாயிரம் ரூபாய் சேர்த்து விட்டேன் .

அந்த பயிற்சி வகுப்புக்கு சேர அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு பெயர் கொடுத்தேன் .அந்த பயிற்சி வகுப்பு ஒரு ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்றால் நான் காலை ஏழு மணிக்கே அந்த இடத்துக்கு சென்று விட்டேன் .கொடுமை என்னவென்றால் என்னை போல் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எனக்கு முன்னதாகவே காத்திருந்தனர் .நேரம் ஆக ,ஆக முன்னூத்தி எண்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள் லோகேஷை காண வந்திருந்தனர் .

லோகேஷ் கடந்து வந்த பாதை ,படம் குறித்த தகவல் ,அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எங்களை போன்றோருக்கு செல்ப் மோட்டிவேஷனாக இருந்தது .அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்பது வேறு கதை .எங்களை போன்ற சினிமா ஆர்வமுடைய நபர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் ,ஒரு தன்னார்வ அமைப்புக்கு உதவி செய்யவும் தான் அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார் .

ஒரு போதும் உங்கள்  முயற்சியை ,பேஷனை கை விடாதீர்கள் .யார் என்ன சொன்னாலும் உங்களை நம்புங்கள் .உங்கள் விடாமுயற்சி நிச்சயம் வெற்றி தரும் என்றார் .உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் என்னிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று மட்டும் கோரிக்கை வைக்காதீர்கள் என்று எங்களிடமே ஒரு கோரிக்கை வைத்தது எங்களுக்கு அதிர்ச்சியாய் அமைந்தது .

ஒவ்வொருவருக்கும் புகைப்படம் எடுக்க ஒரு குறிப்பிட்ட நிமிடம் அவகாசம் தரப்பட்டது .எனக்கான நேரத்தில் உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற ஒரு விண்ணப்பத்தோடும் ,நிறைய ஏமாற்றத்தோடும் புகைப்படம் எடுத்து விட்டு வந்தேன் .அவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்ற இயக்குனர் ரொம்ப எளிமையாக பேசுவதே பெரிய விஷயம் என்ற ஆறுதலோடு திரும்பி வந்தேன் .

இந்த கோடம்பாக்கம் என்னையும் ஒரு நாள் திரும்பி பார்க்கும் என்ற நம்பிக்கையோடு நடந்து சென்றேன் உச்சி வெயில் நெற்றியில் அடித்தது காலையில் சாப்பிடாமல் வந்ததால் கொஞ்சம் அடிவயிறு வலித்தது ஏதாவது தள்ளுவண்டி கடையில் சாப்பிடலாம் என்றால் பாக்கெட்டில் ஒரு இருபது ரூபாய் கூட இல்லை அருகே இருந்த கோயிலில் அன்னதானமாக அறுசுவை விருந்து நடந்து கொண்டிருந்தது .அதன் மணம் வேறு காற்றில் பரவி எனக்குள் பசியை அதிகரிக்க தொடங்கியது .இந்த சென்னைக்கு வந்த இத்தனை வருஷத்துல தினம் ,தினம் தயிரில் தண்ணியை ஊத்தி ,ஊத்தி சாப்பிட்டது வெறுப்பாய் போய் விட்டது .அடிக்கிற வெய்யிலிலும் தயிர் சாதம் தான் ,கொட்டுற மழையிலும் தயிர் சாதம் தான் .

என்ன வாழ்க்கை இதுன்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா நிச்சயம் ஒருநாள் ஜெயிப்போம் அப்ப நம்ம வாழ்க்கை நிச்சயமா மாறும் என்ற நம்பிக்கை இருந்துச்சு .

நீங்க கேட்கலாம் அமீர் கோயில்ல போய் சாப்பிடலாமான்னு ??

இருக்கிறவனுக்கு தான் கடவுள் ,மதம் ,சாதி எல்லாம் சார்

இல்லாதவனுக்கு மனிதமும் ,பசியும் தான் பெரிசு

பசி வந்தா பத்தும் மட்டுமல்ல எல்லாமும் மாறி போகும் .இங்கே இல்லாதவன் எல்லாருமே ஒரே சாதி ,ஒரே மதம் தான் .

பசியில் கோயிலுக்குள் நுழைந்தேன் ,தூணில் கொட்டியிருந்த திருநீறை நெற்றியில் பூசி கொண்டு அன்னதானம் நடைபெறும் இடத்துக்கு சென்றேன் .

ரொம்ப வருசமாச்சு இன்றைக்கு வடை ,பாயசத்தோட ,சாம்பார் ,ரசம் போட்டு அப்பளத்தை சாப்பாட்டுல நொறுக்கி போட்டு ஒரு பிடி ,பிடிச்சிடணும்னு ரொம்ப ஆசையோட உட்கார்ந்தேன் .

அப்போது தம்பி சாம்பார் ,ரசமெல்லாம் தீர்ந்து போச்சு .வெறும் சோறும் ,மோரும் தான் இருக்கு

சாப்பிடுறீங்களா என்று கேட்டார்கள்

பசி கொடுமையில் "ம் "தலையாட்டினேன் .

 

 

 

எண்ணமும் -எழுத்தும்

 

நௌஷாத் கான் .லி

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக